கொஞ்சி விளையாடிடும் மழலை
மாறச் செல்ல மகள்,
குறும்பு சண்டைகள் இட்டாலும் உடன் பிறந்தோரை
வழி நடத்தும் அன்பு சகோதரி ,
என்றும் தொடரும் பொறுப்புகளைச் சுமக்க புறப்பட்ட
தைரியமான ஒரு மனைவி,
குழந்தைகளிடம் அளவில்லா அன்பைக் கொட்டி
அவர்கள் அன்பைப் பெற ஏங்கும் ஒரு தாய்,
இவ்வளவு அடையாளம் இருந்தும் நாம்
அனைவரும் தனிமையில் மகிழ்ச்சியாய் இருக்கிறோமா?
இல்லை இதுதான் நாம் என்று மற்றவருக்காக
வாழ்ந்து வாழ்ந்து நம் வாழ்க்கை
ஒரு பெருமூச்சாய் முடியப் போகிறதா?
உருவாக்கிடுகள் ஒரு பதிலை
மற்றவர் பெயர் சேராமல்
ஒரு தனி அடையாளம், அது
எதுவாகினும் அதுவே என்றும் நீ !
Tag: tamil poems
வறுமையில் ஓர் கனவு
வறுமையின் விளிம்பில் இருந்தும்
கனவுகள் கண்டேன்
இன்று என் மனதை நிறைத்திடும் அவை
நாளை வயிற்றையும் நிறைத்திடும் என்ற நம்பிக்கையில் !!
ஏக்கம்
மனம் சின்ன குழந்தையாய்
துள்ளி குதித்திட
ஆனந்த கூத்தாட
எல்லையில்லா மகிழ்ச்சியில்
களித்திருக்க ஏங்கி ஏங்கி
தவித்த காலங்கள் சில,
மற்றும் அவை முழுதும் கற்பனை
காட்சிகளாய் மறைந்த
பொழுதுகளும் பல !!
நிறைவேறா ஆசை
கசக்கும் உண்மைக்கும்
இனிக்கும் கனவிற்கும்
இடையே உள்ள
குறுகிய இடைவெளி நிறைவேறா ஆசை
தேடல்
எல்லாம் உள்ள பணக்காரனின் தேடல்
மனநிம்மதிக்காக ,
அனைத்தையும் துறந்த ஞானியின் தேடல்
முக்திக்காக ,
எளிய ஏழையின் தேடல்
ஒரு வேலை உணவிற்காக,
அரசியல்வாதியின் தேடல்
மேலும் உயர்ந்த பதவிக்காக,
கூண்டிலிருக்கும் பறவையின் தேடல்
எல்லையில்லா வானத்திற்காக,
பாயும் புலியின்
தேடல் இரைக்காக,
துள்ளித் தப்பிக்கும் மானின்
தேடல் வாழ்விற்காக,
மீனவனின் வலையிலிருந்து தப்பிக்க மீனின்
தேடல் அதிர்ஷ்டத்திற்காக,
தேவைகள் பலவாயினும்
தேடல்கள் ஒன்றே
இல்லாத ஒன்றைத் தேடித்தேடி
நம் வாழ்க்கை நகர்கின்றதே!!!
என் அம்மா
மழையென வந்து
என் கண்ணீர் துடைத்தாய்
காற்றென வந்து
என் மனதை மகிழ்வித்தாய்
கண் இமையாய் இருந்து
என்னை காத்தாய்
கண்ணாடியாய் வந்து
நான் யாரென காட்டினாய்
புத்தகமாய் வந்து
எனக்கு உலகை கற்பித்தாய்
பேனாவாய் வந்து
என் தலைவிதி எழுதினாய்
வார்த்தையாய் வந்து
எனக்கு அர்த்தம் தந்தாய்
வானவில்லாய் வந்து
எனக்கு பல வர்ணங்கள் தந்தாய்
கனவென வந்து
எனக்கு நம்பிக்கை ஊட்டினாய்
விளையாட்டு மைதானமாய் வந்து
என்னை விழுந்தும் எழ வைத்தாய்
தேவதையாய் வந்து
என் வாழ்வை ஆசிர்வதித்தாய்
கடல் போல் சொல்ல இருக்க ,
சிறு துளியாய் இந்த கவிதைத் தொடக்கம்.